கிணறு வெட்டும் வேலை, முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது.

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

வாரிசு அரசியல்!

‘என் குடும்பத்தில் மட்டும்தான் வாரிசு அரசியல் தெரிகிறதா, காஷ்மீரில் இல்லையா, கர்நாடகாவில் இல்லையா, ஒரிசாவில் இல்லையா’ என்றெல்லாம் அவ்வப்போது ஓலக்குரல்கள் ஓங்கியும், வீங்கியும் ஒலிப்பதை, சொரணை கெட்ட தமிழர்கள், அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க வாய்ப்பில்லை.
அப்படி போடப்படும் பட்டியல்கள் எல்லாம், அகில இந்திய அளவில் மட்டுமே  நின்று போவது, நம்மைப்போன்றவர்களுக்கு, உள்ளபடியே வருத்தம் தருவதாக  இருக்கிறது.
ஆகவே, உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் நலன் கருதியும்,  அவர்கள் வாழும் நாட்டிலும், வாழ ஆசைப்படும் நாட்டிலும், வாரிசு அரசியல் வாழ்கிறது என்பதை நினைவூட்டிக்காட்டவுமே இந்தப்பதிவை எழுத வேண்டியிருந்தது.
சரி, விஷயம் இது தான்.
அமெரிக்காவில் அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ், பலருக்கும் நினைவில் இருப்பார். அவரது இளைய மகனும், இப்போது அதிபர் பதவிக்கான போட்டியில் குதிக்க திட்டமிட்டிருக்கிறாராம்.
முதலாவது அதிபர் புஷ், முதல் வளைகுடாப்போரை தலைமை வகித்து நடத்தியவர். அதாவது, சதாம் உசேன், குவைத்தை ஆக்கிரமித்ததை  எதிர்த்து போர் நடத்தியவர். நான்கு ஆண்டுகள் அமெரிக்க அதிபராக  இருந்தார். முன்னதாக இரண்டு முறை, துணை அதிபராகவும் இருந்திருக்கிறார்.
அவரது மூத்த மகன், மற்றொரு ஜார்ஜ் புஷ். இவர், இரண்டாம் வளைகுடாப் போர்  நடத்தியவர். இவரது காலத்தில்தான், அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டது. பதிலடியாக ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்து, தலிபான் ஆட்சியை அகற்றினார் புஷ். ஈராக் மீது போர் தொடுத்து, சதாம் உசேன் ஆட்சியை காலி செய்ததும் இவர்தான். அதிபர் பதவிக்கு வருவதற்கு முன், டெக்சாஸ் மாகாண கவர்னராகவும் இரண்டு முறை பதவி வகித்திருக்கிறார்.
இப்போது, முதலாவது ஜார்ஜ் புஷ்ஷின் இளைய மகன், அதாவது, இரண்டாம்  புஷ்ஷின் சகோதரர், ஜெப் புஷ், அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் குதிக்கலாமா  என்று தீவிர ஆலோசனையில் இருக்கிறார். அதற்கு வசதியாக, பல்வேறு  நிறுவனங்களின் நிர்வாகக்குழுவில் இருந்தும் வெளியேறி இருக்கிறார்.
இவர், ஏற்கனவே, புளோரிடா மாகாணத்தில் இரண்டு முறை, கவர்னராக பதவி  வகித்தவர். இவர் புளோரிடா கவர்னராகவும், இவரது சகோதரர் டெக்சாஸ் கவர்னராகவும், ஒரே நேரத்தில் பதவி வகித்திருக்கின்றனர், என்பது குறிப்பிடப்பட வேண்டிய  விஷயம்.
குடியரசுக் கட்சிதான், இவர்களுக்கு இத்தனை வாய்ப்புகளை அள்ளி வழங்கியிருக்கிறது; இன்னும் வழங்கவும் போகிறது. தந்தை அதிபராக பதவி வகித்த காலத்தில், ஜெப் புஷ், எப்படியெல்லாம் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார் என்பது பற்றி, நியூயார்க் டைம்ஸ் கட்டுரை தீட்டியிருக்கிறது. அதையும் பாருங்கள்:

அமெரிக்கர்கள் அறியாத சட்டமில்லை; தர்மமும் இல்லை என்பது நாமறிந்த ஒன்று. ஆகவே, இங்கே நடக்கும் வாரிசு அரசியலுக்காக, தமிழர்கள் வெட்கப்பட வேண்டும், வேதனைப்பட வேண்டும், தலைகுனிய வேண்டும் என்று யாரேனும் பிற்போக்குவாதிகள் உளறிக் கொண்டிருந்தால், அதையெல்லாம் பொருட்படுத்த தேவையில்லை என்பதே, இன்றைய நம் விடுமுறை தின கருத்து.

வியாழன், 12 பிப்ரவரி, 2015

வருமுன் காக்கும் ஜப்பான்!

ஜப்பான், எந்தளவுக்கு முன்னெச்சரிக்கையுடன் இருக்கிறது, என்பதற்கு இந்த சம்பவம், ஒரு உதாரணம். சமீபத்தில், இரு ஜப்பானியர்களை, இஸ்லாமிய பயங்கரவாதிகள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துக்கொண்டு, பணம் கேட்டு மிரட்டியதும், பின்னர் தலை துண்டித்து கொன்றதும், உலகம் அறிந்ததே.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெரும் நெருக்கடியை அந்நாட்டு அரசுக்கு ஏற்படுத்திய இந்த விவகாரத்தால், அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் ஜப்பான் மேற்கொண்டுள்ளது. சிரியா உள்ளிட்ட, பிரச்னைக்குரிய நாடுகளில் இருக்கும் தங்கள் நாட்டவர் அனைவரையும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற உத்தரவிட்டிருக்கிறது.
மத்தியக்கிழக்கு நாடுகளுக்கு செல்லும் அனைவருக்கும் அவ்வளவு சீக்கிரம் அனுமதியும் வழங்குவதில்லை. தீவிர விசாரணைக்குப் பிறகே, அதுவும் கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையிலேயே அனுமதி கிடைக்கிறது.
பிரச்னைக்குரிய இடங்களுக்கு செல்ல நினைப்பவர்களுக்கு நிச்சயம் அனுமதி கிடையாது.
அமெரிக்க கூட்டுப்படை நாடுகளுக்கு பொருளாதார உதவி செய்யும் ஜப்பானுக்கு, பயங்கரவாதிகள் விடுத்திருக்கும் நேரடி மிரட்டலே இதற்கு முக்கியக்காரணம்.
கடந்த வாரம், சுஜிமாட்டோ என்ற பத்திரிகை புகைப்படக்காரர், சிரியா செல்வதற்கு முயற்சிப்பதை அறிந்த ஜப்பான் வெளியுறவுத்துறை, பயணத்துக்கு தடை விதித்ததுடன், உடனடியாக அவரது பாஸ்போர்ட்டை பறிமுதலும் செய்து விட்டது.
அரசு உத்தரவை மீறும் பட்சத்தில் அவருக்கு ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கவும் ஜப்பானிய சட்டத்தில் வாய்ப்புள்ளது. பயங்கரவாதிகளின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிக்கு, தானாக விரும்பிச் சென்று ஒருவர் பிடிபட்டு விட்டாலும், அவரை மீட்பதற்கான தார்மீக கடமை அரசுக்கு இருக்கிறது.
அந்த வகையில், பத்திரிகையாளரின் உயிரை காப்பதற்கான கடமையை கொண்டிருப்பதாலேயே, அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்துள்ளதாக, அரசு அறிவித்துள்ளது.
ஆர்வக்கோளாறு ஆசாமிகள், வலியச்சென்று பயங்கரவாதிகளிடம் சிக்கிக் கொண்டு, அரசுக்கு உள்நாட்டில் நெருக்கடி ஏற்படுத்துவதை தவிர்க்கவே இந்நடவடிக்கையை பிரதமர் அபி தலைமையிலான அரசு மேற்கொண்டுள்ளது.
சில வாரங்களுக்கு முன், பயங்கவாதிகளால் தலை துண்டித்த கொல்லப்பட்ட ஜப்பானிய பத்திரிகையாளர் கெஞ்சி கட்டோவை, ‘பயங்கரவாதிகளின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிக்கு செல்ல வேண்டாம்’ என்று, அந்நாட்டு அதிகாரிகள் மூன்று முறை அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால் அதை பொருட்படுத்தாத அவர், தன் செயலுக்கு தானே பொறுப்பேற்பதாக வீடியோ பதிவை செய்து வைத்து விட்டு, பயங்கரவாதிகளின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிக்கு சென்றிருப்பது, பின்னர் தெரியவந்தது.
‘தனி நபர் சுதந்திரத்தை மீறுவதாக இருந்தாலும், பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்த அரசின் நடவடிக்கை, மிகச்சரியானது’ என்பதே, அந்நாட்டினரின் கருத்தாக இருக்கிறது.