கிணறு வெட்டும் வேலை, முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது.

வெள்ளி, 8 ஜனவரி, 2016

சீனாவுக்கு என்ன ஆச்சு!

இந்தியா, எப்போது ரூபாய் மதிப்பைக் குறைத்தது என்பது, நினைவில் இருக்கிறதா? நரசிம்ம ராவ் பிரதமராகவும், மன்மோகன் சிங் நிதியமைச்சராகவும் பொறுப்பேற்ற 1991ம் ஆண்டில், அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாணய மதிப்புக்குறைப்பு நடைபெற்றது. அதாவது, இந்தியா, பொருளாதார ரீதியாக திவால் ஆகி விடும் என்கிற நிலையில், ரூபாய் மதிப்பு, 18 சதவீதம் குறைக்கப்பட்டது.
கையிருப்பில் அந்நியச் செலாவணியே இல்லை; ரிசர்வ் வங்கி வைத்திருக்கும் தங்கத்தை அடகு வைத்துப் பணம் வாங்கி, கச்சா எண்ணெய் வாங்கும் நிலையில், நாடு நாடாக கையேந்தும் கட்டாயத்தில் இருந்த காலத்தில், இந்தியா, ரூபாய் மதிப்பை குறைத்தது.
ஆனால், அப்படி எந்த கட்டாயமும் இல்லாத சீனா, இப்போது, நாணய மதிப்பை தாறுமாறாக குறைத்து, ஆடு புலி ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கிறது. வியாழக்கிழமையன்று, சீனத்து யுவான் மதிப்பை குறையவிட்டதன் எதிரொலியாக, உலக நாடுகளின் பங்குச்சந்தைகள் தலைகுப்புற விழுந்திருக்கின்றன. முதலீடு செய்தவர்கள் எல்லாம், தலையில் துண்டு போடாத குறையாக, புலம்பித்தீர்க்கின்றனர்.
இப்படி சீனா செய்தது, முதல் முறையல்ல; தொடர்ச்சியாக, எட்டாம் முறையாக, நாணய மதிப்பை குறைத்திருக்கிறது. உலகப்பொருளாதாரத்தை கரைத்துக் குடித்திருக்கும் நிபுணர்கள் எல்லோரும், சீனாவின் நோக்கம் தெரியாமல், மண்டையை பிய்த்துக் கொள்கின்றனர்.
ஏற்றுமதி பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்ட சீனாவிடம், அந்நியச் செலாவணி, கொட்டிக் கிடக்கிறது. இந்த வார கணக்கீட்டின்படி, அந்நாட்டு மத்திய வங்கி வைத்திருக்கும் அந்நியச் செலாவணி, 3.33 டிரில்லியன் டாலர்கள்.
ஒரு மில்லியன் என்பது பத்து லட்சம். ஒரு பில்லியன் என்பது 100 கோடி. ஒரு டிரில்லியன் என்பது, ஆயிரம் பில்லியனுக்கு சமம். அதாவது, ஒரு லட்சம் கோடி டாலர். இந்த இடத்தில், இந்தியாவின் அந்நியச்செலாவணி கையிருப்பு, 351 பில்லியன் டாலர் மட்டுமே என்பதை கருத்தில் கொள்ளுங்கள்!
தொழில் துறையில் தேக்க நிலை இருந்தாலும், அந்நாட்டுக்கு பணப் பிரச்னை என்பதெல்லாம் கிடையவே கிடையாது. பிற ஆசிய நாடுகள், ஆப்பிரிக்க, தென் அமெரிக்க நாடுகளை, பணத்தால் அடித்தே, தன் வசப்படுத்தி வருகிறது, சீனா. அப்படியெனில், என்னதான் பிரச்னை?
இப்போது யுவான், சர்வதேச நாணயம் ஆகி விட்டது. ஐ.எம்.எப்., தன் கையிருப்பு செலாவணியில் ஒரு பகுதியை யுவான் ஆக வைத்திருக்கப்போவதாகவும் அறிவித்து விட்டது.
திவால் ஆகிப்போன ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்பே, இனி மேல் சீனத்து யுவான் தான் எங்களுக்கும் நாணயம் என்று அறிவித்திருக்கிறது. இப்படி மேலே மேலே பறந்து கொண்டே இருக்கும் சீனா, ஏன் இப்படி திடீரென நாணய மதிப்பை குறைத்து, மற்றவர் கழுத்தை அறுக்க வேண்டும் என்பது, உலக நாட்டினரின் கேள்வியாக இருக்கிறது.
அந்நாட்டு அரசோ, அமைச்சர்களோ, அதிகாரிகளோ, வெளிப்படையாக எதையும் அறிவிப்பதில்லை. எல்லாம், வெளியில் இருந்து வரும் யூகங்கள் தான். ‘நாணய மதிப்பை சரிய அனுமதிப்பதன் மூலம், உற்பத்தி செலவினம் குறைந்து விடும்; ஏற்றுமதிச் சந்தையில் பிற நாடுகளுடன் போட்டியிட்டு எளிதில் வெல்ல முடியும்; ஸ்தம்பித்து நிற்கும் பொருளாதாரம், தொழில் துறைக்கு மீண்டும் புத்துயிர் தர முடியும்’ என்பது அதன் திட்டம் என்பது, யூகங்களில் பிரதானமான ஒன்று.
சந்தையின் போக்கில், நாணய மதிப்பை சரியவிடுவதுபோல் போக்கு காட்டி, ‘தான் பரம யோக்கியர்’ என்று காட்டிக் கொள்ளும் முயற்சி என்றொரு யூகமும் இருக்கிறது.
சீனா போன்ற பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நாடு,  நாணய மதிப்பை குறைப்பதன் மூலம், உலகச்சந்தைகளில் கடும் பாதிப்பு ஏற்படுகிறது. மற்ற நாடுகளும், உலகச்சந்தைகளில் போட்டியிட்டாக வேண்டிய சூழ்நிலை இருப்பதால், தங்கள் நாணயத்தை குறைக்கும் கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றன.
இதனால், டாலர் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும் பொருட்களின் விலை, தாறுமாறாக எகிறும். உதாரணத்துக்கு கச்சா எண்ணெய், எரிவாயு, தங்கம் போன்றவை. இவ்வாறு ஒவ்வொரு நாடும் தங்கள் நாணய மதிப்பை குறைக்க முற்பட்டால், சந்தை நிலைத்தன்மையற்றதாகி விடும். பொருட்களின் விலை எகிறுவதால், பொருளாதாரம் ஸ்தம்பித்து விடும் என்கின்றனர், மேற்கத்திய பொருளாதாரப்புலிகள்.
மலையளவு அந்நியச் செலாவணியை கையில் வைத்திருக்கும் சீனா, பிறரைப் பற்றி கவலைப்படப் போவதில்லை. ‘சந்தையில், தான் மட்டுமே இருக்க வேண்டும், மற்றவர்கள் ஒழிந்தாலும் தனக்கு கவலையில்லை’ என்பதைப்போல், சீனாவின் செயல்பாடு இருப்பதாக, மேற்கத்திய ஊடகங்களில் கருத்துக்கள் வெளியாகின்றன.
சீனாவின் பரிசோதனை முயற்சிகளால், பிற நாடுகளில் பங்குச்சந்தையில் இருக்கும் முதலீட்டாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் என்பது மட்டும் நிச்சயம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக