கிணறு வெட்டும் வேலை, முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது.

சனி, 23 ஜனவரி, 2016

குரங்குகள் கையில் பூமாலை!

மாலத்தீவில், ஜனநாயகம் குப்பைக்கூடைக்குப் போய், மூன்றாண்டுகள்  கடந்து விட்டன. ஒரே நம்பிக்கையான, முன்னாள் அதிபர் நஷீத்,  இப்போதுதான் சிறைக்கம்பிகளுக்கு பின்னால் இருந்து, ஜாமினில் வ ந்திருக்கிறார்; அதுவும், முதுகெலும்பு அறுவை சிகிச்சைக்காக.
வக்கீல் அமல் குளூனியின் பிரபலமும், அவரது அமெரிக்க, ஐரோப்பிய  தொடர்புகளும், நஷீத்துக்கு இந்த ஜாமினை பெற்றுக் கொடுத்திருக்கின்றன.
நஷீத், ஜனநாயக அடிப்படையில், மக்களால் தேர்வு செய்யப்பட்டு  ஆட்சிக்கு வந்தவர். இந்திய ஆதரவாளரான அவரது ஆட்சி, துப்பாக்கி  முனையில் கவிழ்க்கப்பட்டது.
அரசு சுமத்திய பயங்கரவாத குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அவருக்கு  13 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. அந்த தண்டனையில் இருந்துதான், நஷீத்துக்கு ஒரு மாதம் இடைக்கால ஜாமின் கிடைத்திருக்கிறது.
மாலத்தீவில் இப்போது, அப்துல்லா யாமீன்  தலைமையில் நடப்பது, இந்திய விரோத, சர்வாதிகார ஆட்சி. முப்பது ஆண்டுக்கும் மேலாக அதிபராக இருந்த கயூம் பின்னணியில் இருக்கும் தற்போதைய ஆட்சியில், ஜனநாயகம் என்பது பெயரளவுக்குக்கூட கிடையாது.
மாலத்தீவில் ஜனநாயகம் சீரழிக்கப்படுவதையும், அரசியல் எதிரிகள் சிறையில் அடைக்கப்படுவதையும் சர்வதேச நாடுகள் வேடிக்கை பார்க்கின்றன.
சிரியா, ஈராக், லிபியாவைப் போல், எண்ணெய் வளமோ, பிராந்திய முக்கியத்துவமோ  இல்லாத மாலத்தீவில், ஜனநாயகம் இருந்தாலென்ன, சர்வாதிகாரம்  இருந்தாலென்ன என்பதே, மேற்கத்தியர்களின் நிலை.
ஐ.நா.,வும், ஐரோப்பிய யூனியனும், காமன்வெல்த் கூட்டமைப்பும், அவ்வப்போது வெளியிடும் அறிக்கைகளைப் பற்றி, மாலத்தீவு ஆட்சியாளர்கள் கண்டுகொள்வதேயில்லை. சர்வதேச அரங்குகளில் தங்களுக்காக வாதாட, அவர்களும் ஒரு பிரபல வக்கீல் வைத்திருக்கின்றனர்.  அவர், முன்னாள் பிரிட்டீஷ் பிரதமர் டோனி பிளேரின் மனைவி  செர்ரி பிளேர்.
மொத்தம், 1192 தீவுகளை கொண்ட மாலத்தீவு, சன்னி இஸ்லாமியர்கள்  பெரும்பான்மையாக வசிக்கும் நாடு. போர்ச்சுக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், பிரிட்டீஷ்காரர்கள் என மூன்று வெவ்வேறு நாடுகளின் காலனி ஆட்சியில் இருந்த தீவுக்கூட்டம், 1965ல் தனி நாடாக சுதந்திரம்  பெற்றது.
சுற்றுலாவும், மீன்பிடித்தலும் பிரதான தொழில்கள். உலகின் மிக தாழ்வான நாடு என்பதால், சற்றே கடல் நீர் மட்டம் உயர்ந்தாலும்,  மூழ்கி விடும் அபாயம் உண்டு. பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள் செய்த  எண்ணற்ற குழப்பங்களில், மாலத்தீவுகளை தனி நாடாக அறிவித்ததும்  ஒன்று.
‘சிகிச்சைக்காக, ஜாமினில் லண்டன் சென்றுள்ள நஷீத், திரும்பி வருவார் என்பது நிச்சயமில்லை’ என்பதே மாலத்தீவு ஆட்சியாளர்களின் எண்ணமாக இருக்கிறது.
எனவேதான் ‘குடும்பத்தில் ஒருவர், பிணைக்கைதியாக இருந்தால்தான்,  நஷீத்தை விடுதலை செய்வோம்’ என்று, உலகின் வேறெந்த நாகரிக  கலாசாரம் கொண்ட நாட்டிலும் இல்லாத வகையில், நிபந்தனை  விதித்தனர்.
அதை ஏற்றுக்கொண்டு, சகோதரர் ஒருவர், பிணைக்கைதியாக மாலத்தீவில் இருப்பதற்கு உத்தரவாதம் தெரிவித்தபிறகே, நஷீத்தை அரசு ஜாமினில் விடுவித்துள்ளது; அதுவும், 30 நாட்களுக்குள்  நாடு திரும்பிவிட வேண்டும் என்ற நிபந்தனையுடன்.
லண்டன் சென்றிருக்கும் நஷீத், தன் வக்கீல் உதவியுடன், பிரிட்டன்  பிரதமர் கேமரூனை சந்தித்து உதவி கோரியிருக்கிறார். ‘இன்னுமா இந்த உலகம் நம்மை நம்புகிறது’ என்று கேமரூன் மனதுக்குள்  எண்ணியிருக்கக்கூடும்.
உலக நாடுகளை விட்டுத்தள்ளுங்கள்! அண்டை நாடான இந்தியாவால்  என்ன செய்ய முடிந்தது? அவ்வப்போது, மாலத்தீவின் ஆட்சியாளர்களிடம் மூக்குடைபடுவது, டில்லிவாலாக்களுக்கு வாடிக்கையாகி இருக்கிறது.
இந்திய விரோத, சீன ஆதரவு, மத அடிப்படைவாத சக்திகள், மாலத்தீவில் வேரூன்றி விட்டதை, டில்லிவாலாக்கள் புரிந்து கொண்டிருப்பதால்தான், ‘இருக்கும் மரியாதை தொடர்ந்தால்போதும்’ என்பதாக, அமைதி காக்கின்றனர்.
மாலை போன்ற வடிவில் அமைந்த தீவுக்கூட்டம் என்பதால், மாலைத்தீவுகள் என்ற பெயர், பழந்தமிழர் பயன்பாட்டில் இருந்திருக்கிறது. அப்பெயரே, காலப்போக்கில் மருவி, மாலத்தீவுகளாக மாறியிருக்கிறது. அந்நாட்டின் இப்போதைய நிலையை எண்ணிப் பார்த்தால், ‘பூமாலை, குரங்குகளிடம் சிக்கியிருக்கிறது என்று வர்ணிப்பதே, மிகப் பொருத்தமாக இருக்கும்.

ஞாயிறு, 17 ஜனவரி, 2016

சூடு பிடிக்கும் தேர்தல் களம்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவோரை தேர்வு செய்வதற்கான பிரசாரம், களை கட்டியிருக்கிறது. பிப்.,1ல் ஐயவோ மாநிலத்தில், இரு முக்கிய கட்சிகளும், உட்கட்சி தேர்தலை தொடங்குகின்றன.
தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலமாக தேர்தல் நடக்கும்; முடிவில், இரு கட்சிகளும் தேசிய மாநாடு நடத்தி, தங்கள் வேட்பாளரை தேர்வு செய்வர்.
சத்துணவுக் கட்சி, மது விலக்கு கட்சி, அமைதிக் கட்சி, பசுமைக்கட்சி, சுதந்திரக் கட்சி, சோஷலிசக்கட்சி என கட்சிகள் நிறைய இருந்தாலும், அதிபர் தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதப்போவது, குடியரசுக் கட்சியும், ஜனநாயகக் கட்சியும்தான்.
ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட ஹிலாரி கிளிண்டன், தயாராக இருக்கிறார். மூன்று ஆண்டாக, ஊர் ஊராக பிரசாரம் செய்வது மட்டுமே, அவருக்கு முழு நேர வேலையாகி இருக்கிறது.
இரு முறை அமெரிக்க அதிபராக இருந்த  கிளிண்டனும், அவர் மனைவி ஹிலாரியும், 30 ஆண்டுக்கும் மேலாக முழு நேர அரசியல் பிரபலங்களாக இருப்பதால், பண பலமும், ஆதரவும் அதிகம்; ‘அவர்களை எதிர்ப்பது வீண் வேலை’ என்ற எண்ணம், ஜனநாயகக் கட்சியினர் பலருக்கு ஏற்பட்டிருக்கிறது. எனினும், அக்கட்சியின் பெர்னி சாண்டர்ஸ், நம்பிக்கையோடு களத்தில் இருக்கிறார்.
அமெரிக்க அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் மற்றொரு கட்சியான குடியரசுக் கட்சியில், ஏகப்பட்ட பேர் போட்டியில் இருந்தாலும், கோடீஸ்வரர் டொனால்டு ட்ரம்ப் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார்.
டெட் குரூஸ், ரான்ட் பால், மேக்ரோ ரூபியோ, பென் கார்ஸன், கர்லி பியோரினா, ஜெப் புஷ் உள்ளிட்டோரும், போட்டியில் இருக்கின்றனர்.
நம்மூர் பாபி ஜிண்டால் உட்பட ஐந்து பேர், போட்டியிடுவதாக அறிவித்துவிட்டு, நிலவரம் கலவரமானதை தொடர்ந்து, பின்வாங்கி விட்டனர்.
எந்த ஒரு விஷயத்திலும், தாறுமாறாக பேசக்கூடிய டொனால்டு டிரம்ப், ‘தான் ஒரு உளறுவாயர்’ என்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறார். தொலைக்காட்சி விவாதங்களிலும், தேர்தல் பிரசார நிகழ்ச்சிகளிலும், அவர் வாயைத் திறந்தாலே, குண்டு வீசியதைப் போன்ற கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.
சினிமாவில் ஆன்டி-ஹீரோக்களுக்கு கிடைக்கும் வரவேற்பைப் போல, டிரம்புக்கும் மக்கள் ஆதரவு அமோகமாக இருக்கிறது. இஸ்லாமியர்கள், மத்திய, தென் அமெரிக்க நாடுகளில் இருந்து குடியேறுபவர்களை பற்றிய அவரது கருத்துக்கள், பல்வேறு தரப்பினரிடமும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.
அமெரிக்க அதிபர் தேர்தல், ஒரு மறைமுகத் தேர்தல். அதாவது, தேர்வாளர்களை கொண்ட தேர்தல் கல்லுரி முறை, நடைமுறையில் உள்ளது. வாக்காளர்களால் நேரடியாக தேர்வு செய்யப்படும் தேர்வாளர்கள் ஓட்டளித்து, அதிபரை தேர்வு செய்கின்றனர். இந்தாண்டு தேர்தல், நவ.,8ல் நடக்கிறது.
முன்னதாக, குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு, ஓகியோவின் கிளீவ்லேண்ட் நகரில், ஜூலை 18-21ம் தேதிகளில் நடக்கிறது. ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாடு, பிலடெல்பியா நகரில், ஜூலை 25ல் நடக்கிறது. மாநாடுகளில், பிரதிநிதிகள் ஓட்டளித்து, கட்சிகளின் அதிகாரபூர்வ வேட்பாளர்களை தேர்வு செய்வர்.
வல்லரசு நாடான அமெரிக்காவின் சர்வதேச அளவிலான செயல்பாடுகள் எரிச்சலை ஏற்படுத்தினாலும், அந்நாட்டின் தேர்தல் முறை பலருக்கு உடன்பாடானாதாகவே இருக்கும். அதிலிருக்கும் வெளிப்படை முறை ஒரு முக்கியக் காரணம்.
தேர்தலில் போட்டியிட விரும்புவோர், நிதி திரட்டுவது, செலவிடுவது எல்லாம் வெளிப்படையாக இருக்க வேண்டும். போட்டியிடுபவர் மீதான தனிப்பட்ட புகார்கள், குற்றச்சாட்டுகள் எல்லாம் அலசி ஆராயப்படுவது வழக்கம்.
‘தங்களை ஆட்சி செய்பவர்கள் நேர்மையானவர்களாக இருக்க வேண்டும்’ என்று, அமெரிக்க மக்கள் விரும்புவதும் இதற்கு முக்கிய காரணம். ‘யாருக்கு ஆதரவு’ என்பதை, பெரும்பான்மை அமெரிக்கர்கள் வெளிப்படையாக அறிவித்து விடுவது, குறிப்பிடத்தக்க அம்சம்.
போலீஸ் வேலை பார்ப்பதும், போர்களை நடத்துவதுமாக இராமல், அமைதிக்கும், ஏழை நாடுகளின் வளத்துக்கும் வழி செய்யக்கூடிய ஒருவர், அதிபராக வந்தால், அமெரிக்கர்கள் மட்டுமல்ல; அனைவருக்கும் நன்மையே!

சனி, 16 ஜனவரி, 2016

வந்தது பார் ஆட்சி மாற்றம்!

உள்ளூரில் ஆட்சி மாற்றம் வருமா, வராதா என்று, எல்லோரும் ஏகத்துக்கும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், உலக அளவில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு ஆட்சி மாற்றம், ஏற்பட்டிருக்கிறது.
அது, தைவானில் நடந்த ஆட்சி மாற்றம். எட்டாண்டுகளாக ஆட்சியில் இருந்த தேசியவாத கோமிண்டாங் கட்சியினர், அதிகாரத்தை இழந்திருக்கின்றனர். அதிகாரப்பூர்வ முடிவுகள் அறிவிக்கப்படும் முன்னரே, அக்கட்சியின் வேட்பாளர் எரிக் சூ, தோல்வியை ஒப்புக் கொண்டு விட்டார்.
எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினர், (டி.பி.பி.,) ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். முதல் முறையாக, பெண் ஒருவர், 59 வயது சை இங்-வென் அதிபராக பதவியேற்க உள்ளார்.
சீனாவில், கம்யூனிஸ்டுகளுடன் நடந்த உள்நாட்டுப் போர் முடிவில் தோல்வியுற்ற தேசியவாத கோமிண்டாங் கட்சியினர், 1949ல் பார்மோசா தீவில் (இப்போதைய பெயர்தான் தைவான்), தங்கள் ஆட்சியை நிறுவினர்.
நீண்ட காலம், அவர்களது ஆட்சியே சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டதாக இருந்தது.
ஐ.நா., சபையில், சீனாவுக்கான உறுப்பினர் அந்தஸ்தும், வீட்டோ அதிகாரமும் அவர்களிடமே இருந்தன. 1971ல், அந்த அதிகாரம் கம்யூனிஸ்ட்கள் தலைமையிலான சீனாவுக்கு மாற்றி அளிக்கப்பட்டது.
அப்போது முதல், சர்வதேச அரங்குகளில் ஒதுக்கி வைக்கப்பட்ட நாடாகவே தைவான் இருந்து வருகிறது. கம்யூனிஸ்ட் சீனாவின் எதிர்ப்பால், ஐ.நா., சபையில் உறுப்பினராக சேரக்கூட முடியவில்லை. ‘எந்த நாடும், தைவானுடன் தூதரக உறவு வைத்துக் கொள்ளக்கூடாது’ என்று மிரட்டல் விடுவது சீனாவுக்கு வாடிக்கை.
அதற்கு பயந்துகொண்டே, இந்தியா உட்பட பெரும்பாலான நாடுகள், தைவானுடன் நேரடி உறவு வைத்துக் கொள்வதில்லை. உலகின் 21 நாடுகளுடன் மட்டுமே தூதரக உறவு வைத்திருக்கும் தைவான், அமெரிக்க, ஜப்பான், தென் கொரிய ஆதரவுடன், தொழில் வளம் மிக்கதாக மாறியுள்ளது.
‘தைவான், தங்கள் நாட்டின் ஒரு பகுதி’ என்று கூறும் சீனா, ‘தேவைப்பட்டால், ராணுவ நடவடிக்கை மூலமாகக்கூட, தைவானை தங்கள் வசப்படுத்த நடவடிக்கை எடுப்போம்’ என்று அவ்வப்போது அச்சுறுத்தி வருகிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்னைகள் தொடர்பாக, சமீப காலமாக பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. எனினும், ‘மீண்டும் சீனாவுடன் இணைவது என்ற பேச்சுக்கே இடமில்லை’ என்பதே, தைவானியர்களில் பெரும்பகுதியினர் கருத்தாக உள்ளது.
ஜனநாயக ஆட்சி முறையில் பழகிப்போன தைவான் மக்கள், சீனாவின் கெடுபிடி கம்யூனிஸ்ட் ஆட்சியின் கீழ் இருக்க விரும்பவில்லை. இரண்டு கோடியே 30 லட்சம் மக்கள் தொகை கொண்ட தைவானில், குறிப்பிட்ட கால இடைவெளியில் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. அப்படி நடத்தப்பட்ட தேர்தலில்தான், ஆளும் தேசியவாத கட்சியினர் தோற்று, எதிர்க்கட்சியினர் ஆட்சியைப் பிடித்திருக்கின்றனர்.
தோற்றுப் போன கோமிண்டாங் கட்சியின் தேசியவாதிகள், சீனாவுடன் அனுசரணையாக இருக்க வேண்டும் என்ற கொள்கை கொண்டவர்கள். வெற்றி பெற்ற ஜனநாயக கட்சியினரோ, ‘சீனாவுடன் அனுசரித்துப் போக வேண்டியதில்லை. தைவானை சுதந்திர நாடாக பிரகடனம் செய்ய வேண்டியதுதான் பாக்கி’ என்ற கொள்கையை கொண்டவர்கள்.
ஆகவே, எதிர்க்கட்சியினர் வெற்றி பெற்றிருப்பது, நிச்சயம் சீனாவுக்கு நல்ல செய்தியல்ல; புது அதிபரான சை, ‘சீனாவுடனான உறவில், தற்போதைய நிலை அப்படியே தொடரும்’ என்று அறிவித்திருப்பது ஒன்றுதான், சற்று ஆறுதலான செய்தி.