கிணறு வெட்டும் வேலை, முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது.

வெள்ளி, 15 ஜனவரி, 2016

இந்தியாவை குறி வைக்கும் ஈரான்!

எண்ணெய் வள நாடுகளுக்கு, ஏழரை சனி பிடித்திருக்கும் போலிருக்கிறது. அடி மேல் அடியாக, விழுந்து கொண்டே இருக்கிறது. ஜாண் ஏறினால், முழம் சறுக்கும் கச்சா எண்ணெய் மார்க்கெட், ஏறக்குறைய, நம்மூர் கத்தரி, தக்காளி மார்க்கெட் நிலவரத்துக்கு வந்து விட்டது.
போதாக்குறைக்கு, அணு ஆயுத தயாரிப்பு காரணமாக, சர்வதேச தடைகளுக்கு ஆளாக்கப்பட்டிருந்த ஈரான், ‘தடை எந்த நேரத்திலும் விலக்கப்படலாம்’ என்னும் நிலையில், எண்ணெய் ஏற்றுமதிச் சந்தையில் இறங்க, தீவிரம் காட்டி வருகிறது.
ஈரானிய எண்ணெய் கப்பல்களில், கச்சா எண்ணெய் ஏற்றும் பணி முழு வீச்சில் நடப்பதாகவும், இந்தியாவுக்கு ஒரு வாரத்துக்கு தேவையான கச்சா எண்ணெயுடன் கப்பல்கள் புறப்படும் நிலையில் இருப்பதாகவும், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் பீதியை கிளப்பிக் கொண்டிருக்கிறது.
விளைவு, 35 முதல் 38 டாலர் வரையில் இருந்த பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, நேற்று, 30 டாலர்களுக்கும் கீழே வந்து விட்டது; அமெரிக்க பங்குச்சந்தைகளும் அதல பாதாளத்தில் விழுந்திருக்கின்றன.
(இந்தியா கொள்முதல் செய்யும் தரம் குறைந்த கச்சா எண்ணெயின் விலை, சர்வதேச கச்சா எண்ணெய் விலையை காட்டிலும், சில டாலர்கள் குறைவாகத்தான் இருக்கும் என்பதை நினைவில் கொள்க!)
தடை விதிக்கப்பட்ட காலத்தில்கூட, இந்தியாவுக்குத்தான் அதிகப்படியான எண்ணெயை, ஈரான் ஏற்றுமதி செய்து கொண்டிருந்தது. தற்போது தடை விலகும் நிலையில், மீண்டும் இந்தியாவை குறி வைத்தே, ஏற்றுமதி சந்தையில் ஈரான் களம் இறங்கியுள்ளது.
அதாவது, தினமும் 2 லட்சத்து 60 ஆயிரம் பீப்பாய் எண்ணெயை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் ஈரான், கூடுதலாக, 2 லட்சம் பீப்பாய் ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளது.
சீனாவுடன் ஒப்பிடுகையில், இந்தியப் பொருளாதாரம் நல்ல நிலையில் இருப்பதும், கச்சா எண்ணெயின் தேவை, சீனாவை காட்டிலும், இந்தியாவில் அதிகரித்துக் கொண்டே செல்வதும், ஈரானின் முடிவுக்கு காரணங்களாக உள்ளன.
‘இந்தியாவில் ஆண்டுக்கு 10 சதவீதம் கார் விற்பனை அதிகரிக்கிறது. இது, சீனாவை விட அதிகம்’ என்கின்றனர், பொருளாதாரப் புலிகள்.
அணு ஆயுதம் தயாரிப்பு பிரச்னை கிளம்பிய 2011க்கு முன், தினமும் 30 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை ஈரான் ஏற்றுமதி செய்து கொண்டிருந்தது.
சர்வதேச தடைகள் விதிக்கப்பட்ட நிலையில், எண்ணெய் ஏற்றுமதி முடங்கியது. அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே ஏற்றுமதி செய்ய முடியும் என்கிற நிலையில், தினமும், 10 லட்சம் பீப்பாய் மட்டுமே ஏற்றுமதியானது.
இப்போது, அணு ஆயுத தயாரிப்பை கைவிடுவதாக, அமெரிக்கா தலைமையிலான நாடுகளிடம், தலையில் அடித்து சத்தியம் செய்யாத குறையாக ஒப்பந்தம் செய்து கொடுத்ததை தொடர்ந்து, இன்றோ, நாளையோ, இன்னும் சில நாட்களிலோ, ஈரான் மீதான சர்வதேச தடைகள் விலக்கப்பட உள்ளன.
அதை எதிர்பார்த்து, ஈரானும், கப்பல்களில், கச்சா எண்ணெய் ஏற்றி, தயார் நிலையில் வைத்திருக்கிறது. விளைவு, சர்வதேச சந்தைகளில், எண்ணெய் விலை, தலைகீழாக பயணித்துக் கொண்டிருக்கிறது.
தடை விலக்கப்பட்டதும், உடனடியாக, ஐந்து லட்சம் பீப்பாய் எண்ணெய் ஏற்றுமதியை அதிகரிப்பது என்றும், போகப்போக இன்னொரு ஐந்து லட்சம் பீப்பாய் ஏற்றுமதி செய்வது என்றும் ஈரானிய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
விலைச்சரிவுக்காக கண்ணீர் வடிக்கும் பிற எண்ணெய் வள நாடுகளுக்கு, ஈரானியர்களின் வருகையானது, ‘ஏழரை’யின் தாக்குதலை உறுதிப்படுத்துவதாகவே இருக்கிறது. பரிகார பூஜைக்காக, திருநள்ளாறுக்கு தேடி வராமல் இருந்தால் சரி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக