அறிவியல் தொழில்நுட்பம் உச்சத்தில் இருக்கும் இன்றைய காலத்திலும், யாராலும் விளங்கிக்கொள்ள முடியாத மர்மம் ஒன்று உண்டெனில், அது மலேசிய விமானம் மாயமான விவகாரமாகத்தான் இருக்க முடியும். ஓராண்டு கடந்து விட்டது. விமானம் எங்கே போனது, என்ன ஆனது, பயணிகள் கதி என்ன என்ற கேள்விகளுக்கு விடை கிடைத்தபாடில்லை.
வீதிகளில் நடப்பவை, வீட்டுக்குள் இருப்பவை எல்லாம் கண்டறிந்து சொல்லும் செயற்கைக்கோள்கள் பயனற்றவை ஆகி விட்டன. கப்பல்கள், மின்னணு சமிக்ஞை கண்டறியும் கருவிகள், விமானங்கள், நீர்மூழ்கிகள், கடல் ஆழம் சென்று தேடும் நீச்சல் வீரர்கள் இருந்தும், காணாமல் போனது, இன்னும் போனதாகவே இருக்கிறது. இந்தியப்பெருங்கடலில் சல்லடை போட்டுத் தேடியாகி விட்டது. வங்கக்கடல் வரையிலும் வந்து பார்த்தாகி விட்டது.
நம்மூரில், ஆளோ, பொருளோ காணாமல் போனால், வெற்றிலையில் மை போட்டுப்பார்ப்பது வழக்கம். மை போட்டுப்பார்க்கும் மந்திரவாதி, ‘வடக்க, கெழக்க போயிருக்குது, இன்னும் ஒரு மாசத்துல தானே திரும்பி வரும்’ என்று குத்து மதிப்பாகச் சொல்லி வைப்பார். அப்படிச் சில, மலேசிய மந்திரவாதிகளும்கூட முயற்சித்துப் பார்த்து விட்டார்கள்; மாயமான விமானம் வந்தபாடில்லை.
விமானத்தில், பயணிகள், ஊழியர்கள் என 239 பேர் பயணித்தனர். அவர்களில் ஐந்து பேர் இந்தியர்கள். மறைந்த ரங்கராஜன் குமாரமங்கலத்தின் சகோதரி மகன், அவரது சீனத்து மனைவி, சென்னை
யை சேர்ந்த தொண்டு நிறுவன அதிகாரி சந்திரிகா எனச்சிலர் பற்றித்தான் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின. மற்ற பயணிகளில், பெரும்பகுதியினர் சீனர்கள்.
மாயமான விமானம், என்ன ஆகியிருக்கும் என்று பல விதமான கற்பனைகள். வேற்று கிரகவாசிகள் இழுத்துக் கொண்டு சென்றிருக்கலாம் என்று பலருக்கும் சந்தேகம் இன்னமும் இருக்கிறது. இந்தியப்பெருங்கடலின் கட்டக்கடைசியில், அமெரிக்க ராணுவ தளம் இருக்கும் டியாகோ கர்சியோ தீவில் தரை இறங்கியிருக்கலாம் என்று கூட, யூகங்கள் வெளியாகின. சந்துகளில் சிந்துபாடுவதை வழக்கமாக கொண்ட பிரபல டுபாக்கூர் சாமி, ‘மாயமான விமானம், பாகிஸ்தானில் பதுக்கப்பட்டிருப்பதை, போயிங் நிறுவன ‘சோர்ஸ்’ சொல்லிவிட்டது’ என்றொரு புளுகுமூட்டையை கூசாமல் அவிழ்த்து விட்டார்.
ஆயிரமாயிரம் கற்பனைகளுக்கு நடுவே, இந்தியப் பெருங்கடலில் ஏதோ பெயரளவுக்கு தேடிக் கொண்டிருக்கிறது, ஆஸ்திரேலிய ராணுவம். எந்தத் தகவலும் இல்லாமல் அலைக்கழிக்கப்படும் பயணிகளின் உறவினர்களை நினைத்தால் பாவப்படவே தோன்றுகிறது.
மலேசியாவில் பரவாயில்லை; சீனாவில், மாயமான விமானம் பற்றி தகவல் கேட்கச் செல்லும் உறவினர்களை, சீனத்துப் போலீசார், அடித்து உதைத்தும், மிரட்டியும் அனுப்புகிறார்களாம். பரிதாபப்படுவதை தவிர, நாமென்ன செய்ய முடியும்!