கிணறு வெட்டும் வேலை, முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது.

செவ்வாய், 12 ஜனவரி, 2016

ஆடு பகை; குட்டி உறவு!

மத்தியக்கிழக்கில், தாதா நாடாக உருவெடுத்திருக்கும் துருக்கிக்கு, நண்பர்களைப் போலவே, எதிரிகளும் அதிகம். நீண்ட கால நட்பு நாடு அமெரிக்கா; சமீபத்திய எதிரி, ரஷ்யா.
முதலாம் உலகப்போரில் அடைந்த படுதோல்விக்குப் பிறகு, பலப்பல நாடுகளாக பிளக்கப்பட்ட ஒத்தமான் பேரரசின் மிச்சம் மீதியாக இப்போது இருப்பது, துருக்கி.
அமெரிக்கா தலைமையிலான ‘நேட்டோ’ ராணுவக்கூட்டமைப்பில் உறுப்பினர் என்ற அந்தஸ்தால், அக்கம் பக்கத்து நாடுகளை மிரட்டிக் கொண்டிருக்கும் இந்நாட்டின் அதிபர், இஸ்லாமிய பழமைவாதக் கட்சியின் தைப் எர்தோவன்.
அவரது செயல்பாடுகள், யாராலும் கணிக்க முடியாதவை. ஈராக், சிரியாவில் கணிசமான நிலப்பரப்பில் ஆட்சி நடத்தும் இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாதிகள், ஆள் பலமும், ஆயுத பலமும் பெற்றதில், இவரது பங்களிப்பு மிக அதிகம்.
ஒரே நேரத்தில், ரஷ்யா, சிரியா, ஈரான், ஈராக், கிரீஸ் என பல முனைகளில் மோதலை நிகழ்த்திக் கொண்டிருக்கும் எர்தோவன், உள்நாட்டில் குர்துக்களுடன் மீண்டும் முழு அளவில் சண்டையை துவக்கியிருக்கிறார்.
இதற்கான பின்னணி, முதல் உலகப் போரில் இருந்து துவங்குகிறது. துருக்கி, ஈரான், ஈராக், சிரியா என நான்கு நாடுகளும் சந்திக்கும் எல்லைப்பகுதியே, குர்து இன மக்களின் தாயகம்.
துருக்கியில் ஒன்றரை கோடி முதல் ஒன்றே முக்கால் கோடிப்பேர் (மொத்த மக்கள் தொகையில் 20 சதவீதம்), ஈரானில் 60 லட்சம் பேர் (10 சதவீதம்), ஈராக்கில் 60 லட்சம் பேர் (17 சதவீதம்), சிரியாவில் (10 சதவீதம்) 20 லட்சம் பேர், என்ற எண்ணிக்கையில் குர்துக்கள் இருக்கின்றனர். இவர்களில் பெரும்பான்மையினர் சன்னி இஸ்லாமியர். ஷியா பிரிவினரும் இருக்கின்றனர். யாசிடி, கிறிஸ்தவர், யூதர்களும் இவர்களில் உண்டு.
குர்துக்கள் பேரும் மொழி, இந்தோ-ஈரானிய மொழிக்குடும்பத்தின் ஒரு அங்கம். எண்ணிக்கையில் கணிசமானவர்களாகவும், தொடர்ச்சியான ஒரே நிலப்பரப்பை வசிப்பிடமாகவும் கொண்டிருக்கும் தங்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கையை, குர்துக்கள், கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் வலியுறுத்திப் பேச ஆரம்பித்தனர். முதல் உலகப் போர் முடிவில், அதற்கான வாய்ப்பும் ஏற்பட்டது.
ஆனால், துருக்கி, ஈரான், ஈராக், சிரியா நாடுகள் மேற்கொண்ட கடுமையான ஒடுக்குமுறைகளால், குர்துக்களின் தனி நாடு கோரிக்கை, அப்படியே முடக்கப்பட்டது.
துருக்கியிலும், ஈராக்கிலும் போராட்டம் ஓய்ந்தபாடில்லை.
வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்த கோரிக்கை, துருக்கியில்  1978ல் அப்துல்லா ஓகலன், பி.கே.கே., எனப்படும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியை தொடங்கியதும், ஆயுதமேந்திய போராட்டமாக மாறியது. ஆனாலும் பலனில்லை.
துருக்கிய குர்துக்களின் போராட்டம், பின்னுக்குத் தள்ளப்பட்டதற்கு, மேற்கத்திய நாடுகளின் ஆதரவின்மையே முக்கிய காரணம்; ஆனால், சதாம் உசேன் எதிர்ப்பு என்ற பலமான காரணியால், எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், ஈராக்கிய குர்துக்கள், தனி நாடு கோரிக்கையை வென்றெடுக்கும் நிலைக்கு வந்து விட்டனர்.
இர்பில் நகரை தலைமையிடமாக கொண்டு, குர்திஸ்தான் தன்னாட்சிப் பிரதேசம், ஏறக்குறைய தனி நாடாகவே செயல்பட்டு வருகிறது. உள்நாட்டுப் போர் நடக்கும் அண்டை நாடான சிரியாவிலும், அதே நிலை உருவாக தொடங்கியிருக்கிறது.
இப்படிப்பட்ட சூழலில், தங்கள் நாட்டில் கணிசமான எண்ணிக்கையில் இருக்கும் குர்துக்களின் மீது, துருக்கிக்கு சந்தேகம் கிளம்பியிருக்கிறது. ஆகவேதான், உள்நாட்டில் குர்துக்கள் மீது கடுமையான தாக்குதலை தொடங்கிய துருக்கி, சிரியாவில் இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாதிகளை எதிர்த்து போராடும் குர்துப்படையினர் மீதும் தாக்குதல் நடத்துகிறது.
சிரியாவின் குர்துப் படையினருக்கும், தங்கள் நாட்டில் பெரும் பலத்துடன் இருக்கும் பி.கே.கே., குர்துப்படையினருக்கும் இருக்கும் நெருக்கமான உறவு,. துருக்கிய அரசுக்கு பீதியை கிளப்புகிறது. ஒரு வேளை, சிரியாவிலும், குர்துக்கள் தன்னாட்சியோ, தனி நாடோ பெற்று விட்டால், தங்கள் நாட்டில் தலைவலி அதிகரித்து விடும் என்பது, துருக்கி ஆட்சியாளர்களின் எண்ணம்.
உள்நாட்டில் குர்துக்களிடம் கடுமையான அணுகுமுறையை பின்பற்றுவதுடன், சிரியாவில் புகுந்தும் குர்துப்படைகளை தாக்கும் துருக்கி, ஈராக்கில் தன்னாட்சி நடத்தும் குர்துப் படையினருடன் கொஞ்சிக் குலாவுகிறது; அவர்களுக்கு பயிற்சியும் அளிக்கிறது; வர்த்தக உறவும் வைத்துக் கொள்கிறது.
ஈராக்கிய குர்துப் பிரதேசத்தில் இருந்து, நேரடியாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் அதே வேளையில், ஈராக் மத்திய அரசாங்கத்துடன், மோதல் போக்கை கொண்டிருக்கிறது. அதாவது, எல்லா இடத்திலும், ‘ஆடு பகை; குட்டி உறவு’ என்பதே, துருக்கியின் நிலையாக இருக்கிறது.
இப்போது, அமைதி உடன்பாடும், போர் நிறுத்தமும் குப்பைக்குப் போன நிலையில், துருக்கிய அரசும், பி.கே.கே., குர்துப்படையினரும், முழு அளவில் மீண்டும் மோதலில் ஈடுபட வாய்ப்புகள் அதிகரித்து விட்டன.
தன் நாட்டு விமானத்தை சுட்டு வீழ்த்திய ஆத்திரத்தில் இருக்கும் ரஷ்யா, குர்துப்படையினருக்கு ஆதரவு தர வாய்ப்பும் உண்டு. அதிகரித்து வரும் பயங்கரவாத தாக்குதல்கள், உள்நாட்டில் அமைதியற்ற சூழல் உருவாகி வருவதற்கு கட்டியம் கூறுகின்றன. ‘பிரச்னையை எர்தோவன் எப்படி சமாளிக்கப் போகிறார்’ என்று, துருக்கியின் நட்பு நாடுகளும், எதிரி நாடுகளும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக