கிணறு வெட்டும் வேலை, முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது.

வெள்ளி, 8 ஜனவரி, 2016

சீனாவுக்கு என்ன ஆச்சு!

இந்தியா, எப்போது ரூபாய் மதிப்பைக் குறைத்தது என்பது, நினைவில் இருக்கிறதா? நரசிம்ம ராவ் பிரதமராகவும், மன்மோகன் சிங் நிதியமைச்சராகவும் பொறுப்பேற்ற 1991ம் ஆண்டில், அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாணய மதிப்புக்குறைப்பு நடைபெற்றது. அதாவது, இந்தியா, பொருளாதார ரீதியாக திவால் ஆகி விடும் என்கிற நிலையில், ரூபாய் மதிப்பு, 18 சதவீதம் குறைக்கப்பட்டது.
கையிருப்பில் அந்நியச் செலாவணியே இல்லை; ரிசர்வ் வங்கி வைத்திருக்கும் தங்கத்தை அடகு வைத்துப் பணம் வாங்கி, கச்சா எண்ணெய் வாங்கும் நிலையில், நாடு நாடாக கையேந்தும் கட்டாயத்தில் இருந்த காலத்தில், இந்தியா, ரூபாய் மதிப்பை குறைத்தது.
ஆனால், அப்படி எந்த கட்டாயமும் இல்லாத சீனா, இப்போது, நாணய மதிப்பை தாறுமாறாக குறைத்து, ஆடு புலி ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கிறது. வியாழக்கிழமையன்று, சீனத்து யுவான் மதிப்பை குறையவிட்டதன் எதிரொலியாக, உலக நாடுகளின் பங்குச்சந்தைகள் தலைகுப்புற விழுந்திருக்கின்றன. முதலீடு செய்தவர்கள் எல்லாம், தலையில் துண்டு போடாத குறையாக, புலம்பித்தீர்க்கின்றனர்.
இப்படி சீனா செய்தது, முதல் முறையல்ல; தொடர்ச்சியாக, எட்டாம் முறையாக, நாணய மதிப்பை குறைத்திருக்கிறது. உலகப்பொருளாதாரத்தை கரைத்துக் குடித்திருக்கும் நிபுணர்கள் எல்லோரும், சீனாவின் நோக்கம் தெரியாமல், மண்டையை பிய்த்துக் கொள்கின்றனர்.
ஏற்றுமதி பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்ட சீனாவிடம், அந்நியச் செலாவணி, கொட்டிக் கிடக்கிறது. இந்த வார கணக்கீட்டின்படி, அந்நாட்டு மத்திய வங்கி வைத்திருக்கும் அந்நியச் செலாவணி, 3.33 டிரில்லியன் டாலர்கள்.
ஒரு மில்லியன் என்பது பத்து லட்சம். ஒரு பில்லியன் என்பது 100 கோடி. ஒரு டிரில்லியன் என்பது, ஆயிரம் பில்லியனுக்கு சமம். அதாவது, ஒரு லட்சம் கோடி டாலர். இந்த இடத்தில், இந்தியாவின் அந்நியச்செலாவணி கையிருப்பு, 351 பில்லியன் டாலர் மட்டுமே என்பதை கருத்தில் கொள்ளுங்கள்!
தொழில் துறையில் தேக்க நிலை இருந்தாலும், அந்நாட்டுக்கு பணப் பிரச்னை என்பதெல்லாம் கிடையவே கிடையாது. பிற ஆசிய நாடுகள், ஆப்பிரிக்க, தென் அமெரிக்க நாடுகளை, பணத்தால் அடித்தே, தன் வசப்படுத்தி வருகிறது, சீனா. அப்படியெனில், என்னதான் பிரச்னை?
இப்போது யுவான், சர்வதேச நாணயம் ஆகி விட்டது. ஐ.எம்.எப்., தன் கையிருப்பு செலாவணியில் ஒரு பகுதியை யுவான் ஆக வைத்திருக்கப்போவதாகவும் அறிவித்து விட்டது.
திவால் ஆகிப்போன ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்பே, இனி மேல் சீனத்து யுவான் தான் எங்களுக்கும் நாணயம் என்று அறிவித்திருக்கிறது. இப்படி மேலே மேலே பறந்து கொண்டே இருக்கும் சீனா, ஏன் இப்படி திடீரென நாணய மதிப்பை குறைத்து, மற்றவர் கழுத்தை அறுக்க வேண்டும் என்பது, உலக நாட்டினரின் கேள்வியாக இருக்கிறது.
அந்நாட்டு அரசோ, அமைச்சர்களோ, அதிகாரிகளோ, வெளிப்படையாக எதையும் அறிவிப்பதில்லை. எல்லாம், வெளியில் இருந்து வரும் யூகங்கள் தான். ‘நாணய மதிப்பை சரிய அனுமதிப்பதன் மூலம், உற்பத்தி செலவினம் குறைந்து விடும்; ஏற்றுமதிச் சந்தையில் பிற நாடுகளுடன் போட்டியிட்டு எளிதில் வெல்ல முடியும்; ஸ்தம்பித்து நிற்கும் பொருளாதாரம், தொழில் துறைக்கு மீண்டும் புத்துயிர் தர முடியும்’ என்பது அதன் திட்டம் என்பது, யூகங்களில் பிரதானமான ஒன்று.
சந்தையின் போக்கில், நாணய மதிப்பை சரியவிடுவதுபோல் போக்கு காட்டி, ‘தான் பரம யோக்கியர்’ என்று காட்டிக் கொள்ளும் முயற்சி என்றொரு யூகமும் இருக்கிறது.
சீனா போன்ற பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நாடு,  நாணய மதிப்பை குறைப்பதன் மூலம், உலகச்சந்தைகளில் கடும் பாதிப்பு ஏற்படுகிறது. மற்ற நாடுகளும், உலகச்சந்தைகளில் போட்டியிட்டாக வேண்டிய சூழ்நிலை இருப்பதால், தங்கள் நாணயத்தை குறைக்கும் கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றன.
இதனால், டாலர் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும் பொருட்களின் விலை, தாறுமாறாக எகிறும். உதாரணத்துக்கு கச்சா எண்ணெய், எரிவாயு, தங்கம் போன்றவை. இவ்வாறு ஒவ்வொரு நாடும் தங்கள் நாணய மதிப்பை குறைக்க முற்பட்டால், சந்தை நிலைத்தன்மையற்றதாகி விடும். பொருட்களின் விலை எகிறுவதால், பொருளாதாரம் ஸ்தம்பித்து விடும் என்கின்றனர், மேற்கத்திய பொருளாதாரப்புலிகள்.
மலையளவு அந்நியச் செலாவணியை கையில் வைத்திருக்கும் சீனா, பிறரைப் பற்றி கவலைப்படப் போவதில்லை. ‘சந்தையில், தான் மட்டுமே இருக்க வேண்டும், மற்றவர்கள் ஒழிந்தாலும் தனக்கு கவலையில்லை’ என்பதைப்போல், சீனாவின் செயல்பாடு இருப்பதாக, மேற்கத்திய ஊடகங்களில் கருத்துக்கள் வெளியாகின்றன.
சீனாவின் பரிசோதனை முயற்சிகளால், பிற நாடுகளில் பங்குச்சந்தையில் இருக்கும் முதலீட்டாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் என்பது மட்டும் நிச்சயம். 

புதன், 6 ஜனவரி, 2016

இழப்பதற்கு எதுவுமில்லை!

வடகொரியா, இந்த முறை வெடித்திருப்பது ஹைட்ரஜன் குண்டு. ‘சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது’ என்று அறிவித்த அந்நாட்டு அரசு தொலைக்காட்சி, மக்கள் ஆடிப்பாடி கொண்டாடுவதுபோன்ற வீடியோ காட்சிகளையும் ஒளிபரப்பியிருக்கிறது.
சிரியா, ஈரான், ஈராக், சவுதி, ஏமன், பாலஸ்தீனம், உக்ரைன் விவகாரங்களில் மண்டை காய்ந்து கொண்டிருக்கும் மேற்கத்தியர்களுக்கு, கடுப்பைக் கிளப்புவதாக அமைந்திருக்கிறது, இந்த சோதனை.
வழக்கம்போல, கண்டனக் கணைகள் கிளம்பியிருக்கின்றன; ‘கடும் நடவடிக்கை எடுப்போம்’ என மிரட்டலும் விடப்பட்டிருக்கிறது. மேற்கத்திய ஊடகங்கள், சோதனை பற்றிய வழக்கமான சந்தேகத்தை கிளப்பிக் கொண்டிருக்கின்றன.
வடகொரியாவுக்கு சர்வதேச அரங்கில் இருக்கும் ஒரே ஆதரவான சீனா கூட, இந்த சோதனையை கண்டித்திருக்கிறது. அதைப்பற்றி எல்லாம், அந்நாடு கவலைப்பட்டதாக தெரியவில்லை; கவலைப்படவும் போவதில்லை.
தாத்தா, அப்பா, பேரன் என அடுத்தடுத்து, ஒரே குடும்பத்தின் ஆட்சியில் இருக்கும் வட கொரியாவில், பெயருக்குத்தான் கம்யூனிஸ்ட் ஆட்சி; நடப்பதெல்லாம், தனி நபர் ஒருவரின் சர்வாதிகாரம் மட்டுமே.
இப்போது அதிபராக இருக்கும், 32 வயது மட்டுமே நிரம்பிய கிம் ஜங் உன், எப்படிப்பட்டவர், நல்லவரா, கெட்டவரா என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது.
இம்மென்றாலும் மரண தண்டனை, ஏன் என்றாலும் மரண தண்டனை என்று, 70 ஆண்டுகளாக பழகிப் போய் விட்டனர், மக்கள். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, வட கொரியாவுக்கு, பணமும், பொருளும் கொடுத்து ஆதரிப்பார் யாருமில்லை; ‘அரசு சீரழிந்து, அகதிகளாக மக்கள், தங்கள் நாட்டுக்கு வந்து விடக்கூடாதே’ என்பதற்காக, சீனா மட்டும் அவ்வப்போது ஆதரவு வேஷம் கட்டுகிறது.
வறுமையில் வாடும் வட கொரியா, ‘அணு குண்டு ஒன்றுதான் நமக்குப் பாதுகாப்பு’ என்பதை உணர்ந்து ஆண்டுகள் பல கடந்து விட்டன. ஆகவேதான், ஈராக்கின் சதாம் உசேன் மீதும், லிபியாவின் கடாபி மீதும் கை வைத்த மேற்கத்தியர்கள், வட கொரியா மீது கை வைக்க அஞ்சுகின்றனர்.
அந்நாட்டுக்கு மிக அருகே இருக்கும் ஜப்பானிலும், தென் கொரியாவிலும் அமெரிக்க படைத்தளங்கள் இருக்கின்றன; அவற்றில் பல்லாயிரக்கணக்கான அமெரிக்க வீரர்கள் இருக்கின்றனர். ஆகவே, பைத்தியக்காரன் கையில் அணு குண்டு இருப்பதன் அசவுகர்யத்தை, உணர்ந்திருப்பதால்தான், வெற்று மிரட்டல்களோடு வேடிக்கை பார்க்கிறது, அமெரிக்கா. வடகொரியாவை பொறுத்தவரை, இழப்பதற்கு எதுவுமில்லை. ஆபத்து என்று வந்து விட்டால், இருக்கவே இருக்கிறது அணு குண்டு.
அந்நாடு வைத்திருக்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளின் தாக்குதல் எல்லை, அமெரிக்கா வரை நீண்டு விட்டதாக, தகவல்கள் பீதி கிளப்புகின்றன. ஏற்கனவே கடுமையான பொருளாதார தடைகளுக்கு ஆட்பட்டிருக்கும் வட கொரியாவை எப்படி வழிக்கு கொண்டு வருவது என்று தெரியாமல், அமெரிக்காவும், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் நாடுகளும் முட்டி மோதிக் கொண்டிருக்கின்றன.
ஐ.நா., பொதுச் செயலாளரான, தென் கொரியர் பான் கீ மூனுக்கு, பாவம் தர்ம சங்கடம். 70 ஆண்டுகளை கடந்தும் நீடிக்கும் கொரியர்களின் மோதல், மனித குலத்தின் ராஜதந்திர செயல்பாடுகளுக்கு ஏற்பட்ட பெரும் தோல்வி என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

ஞாயிறு, 3 ஜனவரி, 2016

சீரழிந்த நம்பிக்கை!

அமெரிக்காவின் முதல் கருப்பின அதிபர் என்ற பெருமையுடன் பதவிக்கு வந்தவர் ஒபாமா. ஓட்டளித்தவர்களுக்கு மட்டுமல்ல; உலக மக்களில் கணிசமான பகுதியினருக்கு, அவர் மீது நல்லெண்ணமும், ஏதோ ஒரு இனம்புரியாத நம்பிக்கையும் இருந்தன.
ஆனால், அவர்கள் எல்லோரையும் ஒபாமா கைவிட்டு விட்டார் என்பதே, இப்போது உலகளாவிய கருத்தாக இருக்கிறது. சர்வதேச அரசியலிலும், உள்நாட்டு அரசியலிலும், ஒபாமாவின் பல நிலைப்பாடுகள் கேலிக்குரியதாக மாறியிருக்கின்றன.
‘தங்களுக்கெல்லாம் ஏதாவது நல்லது நடக்கும்’ என்று எதிர்பார்த்த அமெரிக்க கருப்பினத்தவர், ‘ஒபாமாவின் ஏழாண்டு ஆட்சியில், தாங்கள் அடைந்தது எதுவுமில்லை’ என்றே கருதுகின்றனர். கருப்பின இளைஞர்களும், பெண்களும் வெள்ளையின போலீசாரால் அடுத்தடுத்து வேட்டையாடப்பட்ட சம்பவங்கள், அமெரிக்காவில் அவ்வப்போது அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன. பெர்குஸன் நகரில் அப்படிப்பட்ட சம்பவம் நடந்தபோது, ஒபாமா விடுமுறையில் கோல்ப் விளையாடிக் கொண்டிருந்தார்.
பொருளாதாரத்திலும், ராணுவ ரீதியாகவும், பலம் வாய்ந்த தங்கள் நாடு, ஒபாமாவின் செயல் திறனற்ற ஆட்சியால், தேவையற்ற விமர்சனங்களுக்கு ஆளாகி வருவதாக, அமெரிக்கர்களின் மதிப்பீடு இருக்கிறது.
அவரது பதவிக்காலத்தில் எடுக்கப்பட்ட சர்வதேச அரசியல் முடிவுகளில், கம்யூனிச நாடான கியூபாவுடன் மீண்டும் உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதும், ஈரானுடன் பேச்சு நடத்தி, பொருளாதார தடைகளை விலக்கிக் கொள்வதும் முக்கியமானவை.
அறுபது ஆண்டுக்கும் மேலாக, பொருளாதார தடைகளுக்கு ஆளாக்கப்பட்டிருந்த கியூபாவுடன் மீண்டும் உறவு ஏற்படுத்திக் கொள்ளும் முடிவுக்கு, பெரிய அளவில் எதிர்ப்பில்லை. ஆனால், ஈரான் விவகாரம் அப்படியல்ல; முக்கிய எதிர்க்கட்சியான, குடியரசு கட்சியினரின் கடும் எதிர்ப்பையும், தோழமை நாடான இஸ்ரேலின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், ஈரானுடன் பேச்சைத் தொடங்கினார் ஒபாமா.
‘பொருளாதாரத் தடையை விலக்கிக் கொள்ள வேண்டுமெனில், அணு ஆயுதம் தயார் செய்யக்கூடாது’ என்பதே, அமெரிக்க தரப்பு வாதம். இதை ஏற்றுக் கொண்ட ஈரான், ‘அணு ஆயுதம் தயாரிக்க மாட்டோம்’ என்று உறுதி கூறி, பொருளாதார தடையில் இருந்து தப்பித்து வெளியே வர முயற்சிக்கிறது.
பேச்சுவார்த்தைக்கு, உள்ளூரிலும், உலக அளவிலும், கடும் எதிர்ப்பு இருக்கவே செய்தது.
இருந்தாலும், தன் நிலையில் ஒபாமா உறுதியாக இருந்தார். எறும்பு ஊர கல்லும் தேய்ந்தாற்போல, இப்போது அவரது முடிவு மாறும் போலிருக்கிறது. ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகள் விதிக்க முடிவெடுக்கப்பட்டால், அது ஒரு வகையில், ஒபாமாவின் ‘அந்தர் பல்டி’ என்றே சொல்ல வேண்டும்.
மற்றபடி, லிபியா மீது தாக்குதல் நடத்தி, அந்நாட்டை சீர்குலைத்தது, ஈராக்கின் ஒரு பகுதியை பயங்கரவாதிகள் கைப்பற்றியும், கண்டுகொள்ளாமல் இருந்தது, ஆப்கானிஸ்தானில் இருந்து ராணுவத்தை அவசரம் அவசரமாக திரும்பப்பெற்று இப்போது விழி பிதுங்கியிருப்பது, சிரியா பிரச்னையில் மூக்கை நுழைத்து குழப்பம் விளைவிப்பது, உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக தடைகளை விதித்து, ஐரோப்பிய நாடுகளையும் விடாப்பிடியாக நிர்ப்பந்தம் செய்வது என அடுத்தடுத்து பல குளறுபடிகளுக்கு அமெரிக்கா காரணமாக இருந்தது, ஒபாமாவின் பதவிக்காலத்தில்தான்.
தனி நாடாக உருவான காலம் முதல், எந்த ஒரு அமெரிக்க அரசுடனும், இஸ்ரேல் அரசு இந்த அளவு உரசிக் கொண்டதாக சரித்திரம் இல்லை. அந்தளவுக்கு, ஒபாமா அரசு மீது, இஸ்ரேலியர்களுக்கு வெறுப்பு உண்டாகி விட்டது.
ஒரு ராணுவ அமைச்சர், திடுதிப்பென்று பதவியில் இருந்து விரட்டியடிக்கப்படுவதெல்லாம், சர்வாதிகார நாடுகளில் மட்டுமே சாத்தியம். அதையும் நிகழ்த்திக் காட்டி விட்டார் ஒபாமா. அகதிகள் பிரச்னையால், ஐரோப்பிய நாடுகள் திணறித் தத்தளிப்பதை கண்கூடாகப் பார்த்தும், கையைப் பிசைந்து கொண்டு நின்றவராகவே இருந்தார். அவரால், எந்த முடிவும் எடுக்க முடியவில்லை.
ஒசாமா பின் லேடனை வேட்டையாடியது அவரது பதவிக்காலத்தில் நடந்திருக்கிறது. அதுகூட, நீண்ட காலத்திட்டம். ஒபாமாவின் பங்கெல்லாம், அதிரடியாக பாகிஸ்தானில் நுழைந்து தாக்குதல் நடத்த அனுமதியளித்தது மட்டும்தான்.
கியூபா எல்லையில் குவாண்டனாமோ விரிகுடாவில், பயங்கரவாதிகளை அடைத்து வைப்பதற்கான சிறைச்சாலை இருக்கிறது. ‘ஆட்சிக்கு வந்தால், அந்த சிறைச்சாலையை மூடுவேன்’ என்பது ஒபாமாவின் வாக்குறுதி. இன்றுவரை அது நிறைவேற்றப்படவில்லை. ‘அதெல்லாம் முடியாது’ என்று, பாதுகாப்புத்துறை கூறி விட்டதாக, தகவல்கள் கசிகின்றன.
‘ஈராக், ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்கப்படைகளை திரும்பப்பெறுவேன்’ என்பது ஒரு வாக்குறுதி. திரும்பப்பெறவும் முயற்சித்தார். ‘பயனில்லை’ என்று தெரிந்தநிலையில், இப்போது ஈராக்கிலும், ஆப்கனிலும், மீண்டும் அமெரிக்கப்படைகள் பாதுகாப்புக்கு வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. அந்த வகையில், ஒபாமாவின் வாக்குறுதி, முன்யோசனையற்ற, வெற்று வாக்குறுதி என்றே நிரூபணம் ஆகியுள்ளது.
‘ஒபாமாகேர்’ என்று தம்பட்டம் அடிக்கப்பட்ட சுகாதாரக் காப்பீடு திட்டம் மட்டுமே, அவரது பெயரை சொல்லிக் கொண்டிருக்கும் என்கின்றனர், அமெரிக்கர்கள்.
பதவிக்காலம் முடிவதற்கு இன்னும் ஓராண்டு காலம் முழுமையாக இருக்கும் நிலையில், சாதித்து விட்டதாக சொல்லிக் கொள்வதற்கு பெரிதாக எதுவுமின்றி, படிக்காமல் தேர்வை எதிர்கொள்ளும் மாணவனை ஒத்த மனநிலையுடன் வெள்ளை மாளிகையில் உட்கார்ந்திருக்கிறார், ஒபாமா. ‘நம்மால் முடியும்’ என்ற அவரது கோஷத்தின் ஜாலத்தில் ஏமாந்த அமெரிக்கர்கள், சீரழிந்த நம்பிக்கையாகவே அவரைப் பார்க்கின்றனர்.