கிணறு வெட்டும் வேலை, முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது.

புதன், 28 ஜனவரி, 2015

இது, தமிழர்களின் ராசி?

இந்திய வெளியுறவுத்துறை செயலாளராக பதவி வகித்த சுஜாதா சிங், பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்த இடத்தில், அமெரிக்காவுக்கான இந்திய தூதராக பணியாற்றிய ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பதவி நீக்கப்பட்டவரும் சரி, பதவி பெற்றிருப்பவரும் சரி, இருவருமே தமிழர்கள். சுஜாதா சிங், இந்திய உளவுத்துறையான ஐ.பி., தலைவராக பதவி வகித்த டி.வி.ராஜேஸ்வரின் மகள். சேலத்தை சேர்ந்தவர்; காங்கிரஸ் கட்சிக்கு நீண்ட காலம் விசுவாசமாக இருந்த காரணத்தால், ஓய்வுக்குப்பின் அவருக்கு உ.பி., மாநில கவர்னர் பதவி கிடைத்தது. அந்தக்காரணமோ, வேறு என்னவோ, பதவிக்காலம் முடிவதற்கு எட்டு மாதங்கள் முன்னதாகவே, சுஜாதா, பதவி நீக்கம் செய்யப்பட்டு விட்டார்.
இப்போது வெளியுறவுத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜெய்சங்கர், அத்துறையில் நீண்ட நெடிய அனுபவம் கொண்டவர். ஆசிய, ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும், பணியாற்றியவர். இரு ஆண்டுக்கு முன், லடாக் பகுதியில், சீன ராணுவமும், இந்திய ராணுவமும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் சூழல், சீனாவில் தூதராக இருந்த ஜெய்சங்கரின் ராஜதந்திரத்தால், சுமுகமாக தீர்க்கப்பட்டது என்றொரு கருத்துண்டு.
அமெரிக்காவுடன், அணுசக்தி உடன்பாடு ஏற்படுவதிலும் இவரது பங்கே பிரதானமாக இருந்தது. ஐ.எப்.எஸ்., அதிகாரி தேவ்யானி விவகாரம் பூதாகரமாக கிளம்பியபோது, அமெரிக்காவுக்கான இந்திய தூதராக, முந்தைய காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்ட ஜெய்சங்கர், அடுத்து வந்த மோடி அரசிலும் நற்பெயரை சம்பாதித்து விட்டார்.
மோடியின் அமெரிக்கப் பயணத்துக்கும், பிரசித்தி பெற்ற மேடிஸன் ஸ்கொயர் கூட்டத்துக்கும், சிறப்பான ஏற்பாடுகளை செய்து, மோடியின் கவனத்தை கவர்ந்தவர் ஜெய்சங்கர். ஜெய்சங்கரின் தந்தை சுப்பிரமணியம், சிறந்த ராஜதந்திரி. பாதுகாப்புத்துறை ஆலோசகராக இருந்தவர். சகோதரர் விஜயகுமார், ஐ.ஏ.எஸ்., அதிகாரி. மற்றொரு சகோதரர் சஞ்சய் சுப்பிரமணியம், வரலாற்று ஆய்வாளர். ஜெய்சங்கரின் மனைவி கியாட்டோ, ஜப்பானியப்பெண்.
வெளியுறவுச் செயலாளர் பதவி, திடீரென பறிக்கப்படுவது, இது முதல் முறையல்ல. ராஜிவ் ஆட்சிக்காலத்தில், இலங்கைப் பிரச்னை உச்சத்தில் இருந்தபோது, வெளியுறவுச் செயலாளராக இருந்த தமிழர் ஏ.பி.வெங்கடேஸ்வரன், ராஜினாமா செய்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் ராஜிவ், தன்னை அவமதிக்கும் வகையில் பேசியதாக உணர்ந்த வெங்கடேஸ்வரன், தானாக முன்வந்து பதவியில் இருந்து வெளியேறினார். இப்போது, பதவி விலகும் வாய்ப்புக்கூட அளிக்கப்படாமல், சுஜாதா வெளியேற்றப்பட்டுள்ளார். ‘பெற்றோர் செய்த பாவம், பிள்ளைகளைச் சேரும்’ என்பார்கள்; சுஜாதாவின் பதவி நீக்கமும், அப்படித்தான் போலிருக்கிறது!

புதன், 22 அக்டோபர், 2014

கிணறும், கிணற்றடி வாழ்வும்!

நதிக்கரைகளில் மட்டுமே வாழ்ந்து கொண்டிருந்த ஆதி மனிதர்கள், நதியறியா திசைகளிலும் நிலத்தை தோண்டி தண்ணீர் எடுக்க முடியும் என்றறிந்தபிறகே, நாலாபுறமும் பயணிக்கத் தொடங்கினர். அந்த வகையில், ஆதி மனிதனின் தலையாய கண்டுபிடிப்புகளில் ஒன்றென்ற பெருமை, கிணறுகளுக்கு நிச்சயம் உண்டு.
அப்படி பலப்பல நூற்றாண்டுகளாக, மனித குலத்துக்கு பேருதவி புரியும் கிணறுகளுக்கு, அந்திமக்காலம் நெருங்கி விட்டதாகவே தெரிகிறது. ஆயிரமாயிரம் அடிகளுக்கு ஆழத்துளைத்து விடும் அறிவியல் யுகத்தில், ஆதி மனிதன் உருவாக்கிய கண்டுபிடிப்பொன்று, களை இழந்து போனதில் ஆச்சர்யம் எதுவுமில்லைதான்.
எங்கள் ஊருக்குள் 30 ஆண்டுக்கு முன்பு வரை, நூற்றுக்கும் மேற்பட்ட கிணறுகள் இருந்தனவென்பது, என் நினைவில் பசுமையாக இருக்கிறது. கிணற்றடியில் எப்போதும் தண்ணீர் சேந்தும் பெண்கள் கூட்டம் கூடியிருக்கும். வீட்டுக்கு வீடு குடத்தில் தண்ணீர் சேந்துவதற்கான கயிறுகள் கூட இருக்கும்.
காலங்கள் மாறி விட்டன. ஊருக்குள் கிணறுகளே இல்லை. இருக்கும் ஓரிரண்டு பொதுக்கிணறுகளிலும், நீரோட்டம் வற்றி விட்டதென, ஆழத்துளைத்து அதிலிருந்து தண்ணீர் எடுக்கும் முறை வந்து பல்லாண்டுகள் ஓடி விட்டன.
எங்கள் ஊர்ப்பக்கம் கிணற்றுப்பாசனம் வழக்கொழிந்து போகும் நிலையில் இருக்கிறது. குப்பை கொட்டவும், கழிவைத் தேக்கவும் பயன்பட்டதுபோக, மீதமிருக்கும் கிணறுகள் எல்லாம், மிஞ்சிப்போனால், இன்னுமொரு தலைமுறை பார்க்கக்கூடும்.
கிணறும், கிணறு சார்ந்த மனித வாழ்க்கையையும் ஆவணப்படுத்தும் முயற்சிதான் இந்த வலைப்பக்கம். வாசகர்களை, இந்த வலைப்பக்கத்துக்கு அன்புடன் வரவேற்கிறேன்.